You are here:

ஈழத்தமிழர்களின் போராட்டவரலாற்றை பதிவு செய்த ஊடகவியலாளர் சபாரத்தினம் காலமானார்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 

Share this Article

இலங்கையின் ஊடகத்துறையில் கடந்த 50வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரும் முன்னாள் டெய்லி நியுஸ் செய்தி ஆசிரியரும், ஊடகப் பயிற்றுவிப்பாளரும், அறிஞருமான த.சபாரத்தினம் கடந்த சனிக்கிழமை தனது 79வது வயதில் காலமானார்.இலங்கை பல்கலைக்கழக பட்டதாரியான சபாரத்தினம் 1957 ஆண்டு தினகரன் பத்திரிகையில் செய்தியாளராக இணைந்து கொண்டார். பின்னர் டெயிலி நியூஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றி 1997ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும் இறக்கும் வரை ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகள் இணையத்தளங்களில் எழுதிவந்தார்.

இலங்கை இதழியல் கல்லூரியின் ஊடகப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த அவர், தமிழில் முதலாவது முழுமையான ஊடகக் கல்வி வெளியீடான ‘பத்திரிகை வழிகாட்டி என்ற நூலை சக ஊடகவியாளர் குழுவொன்றின் உதவியுடன் உருவாக்கியிருந்தார்.

தமிழர்களின் அறவழிப்போராட்ட தலைவரான தந்தை செல்வநாயகம், மலையக தமிழர்களின் தலைவர் தொண்டமான், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகிய தமிழ் தலைவர்களின் வரலாற்றை பதிவு செய்ததன் மூலம் ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றை முழுமையாக பதிவு செய்த ஊடகவியலாளர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இலங்கைத் தமிழ்ச் சங்கம் இணையத்தளத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த நீண்ட கட்டுரைத்தொடர் ஒன்றை ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளார்.

இரண்டு பாகங்களாக இது வெளியிடப்பட்டது முதலாவது பாகத்தில் 37 பகுதிகளும், இரண்டாவது பாகத்தில் 42 பகுதிகளும் வெளிவந்துள்ளன. இந்தத் தொடரில் தமிழரின் அரசியல், ஆயுதப்போராட்டங்கள், அமைதிப் பேச்சுக்கள் குறித்து விபரமாக எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல தந்தை செல்வநாயகம் பற்றிய எழுதிய தொடரில் ஈழத்தமிழர்களின் அகிம்சைப்போராட்ட வரலாற்றை முழுமையாக பதிவு செய்திருந்தார்.

ஆரம்பத்தில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட ஊடகத்துறை டிப்ளோமா பயிற்சி நெறியின் விரிவுரையாளராக பணியாற்றிய சபாரத்தினம் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.பத்திரிகையின் மொழி நடைபற்றி ஊடகத்துறை பாடநெறியை கற்கும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கங்களை வழங்கி ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கான மொழி ஆளுமையை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியிருக்கிறார்.

சபாரத்தினம் வெறுமனே ஊடகத்துறையில் பணியாற்றிய ஒருவரல்ல. பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய சிற்பி. தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும் என இறக்கும் வரை பணியாற்றி வந்த ஒருவர்.
அரச ஊடகங்களில் இருந்து கொண்டு தனது சமூகத்துக்கான கண்ணோட்டத்துடன் பணியாற்றுவது இலகுவான காரிமல்ல. ஆனாலும் சபரத்தினம் தனது பத்திரிகை துறையின் அனுபவத்தின் ஊடான சாணக்கியத்தின் மூலமாக பல விடயங்களை வெளிக்கொணர்ந்த பெருமைக்குரியவராவார் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருக்கிறது.
பத்திரிகைகளில் மொழிகள் எப்படி கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பாக அவர் பல கட்டுரைகளை எழுதியதுடன் இதழியல் தொடர்பாக இலங்கை இதழியல் கல்லூரியினால் வெளியிடப்பட்ட நூலின் ஆசிரியராகவும் செயற்பட்டார்.

பத்திரிகை ஆசிரியர் சங்கம் வருடவருடம் வழங்கிவரும் ஊடக விருதுகளுக்கான தெரிவுக்குழுவின் உறுப்பினராகவும் சபராத்தினம் திகழ்ந்தார். பத்திரிகை பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்னரும் சபாரத்தினம் பல ஆங்கில இணையத் தளங்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் செய்திகளையும் ஆக்கங்களையும் வழங்கிக் கொண்டிருந்தார்.
சிங்கள ஆங்கில மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் நெருங்கிய உறவுகளை பேணி வந்த சபாரத்தினம் தமிழ் பத்திரிகை உலகுக்கு மாத்திரம் அல்ல ஆங்கில பத்திகைத்துறைக்கும் ஒரு நிபணராக விழங்கினார். இலங்கையின் ஊடகத்துறை வராலற்றில் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற ஊடகவியலாளர்கள் வரிசையில் சபராத்தினம் மிகவும் முக்கியமானவர்.

ஊடகத்துறையின் மிக மூத்த ஊடகவியலாளர் ஒருவரை இலங்கை ஊடகத்துறை இழந்திருக்கிறது. ஆனாலும் அவரால் ஊடகத்துறையினருக்காக ஆக்கியத்தந்த நூல்களும் அவர் எழுதிய ஆய்வுகளும் என்றும் அவரின் பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கும்.

Share this Article

 

Add comment


Security code
Refresh

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2827152