You are here:

லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 

Share this Article

"லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காக நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு போருக்கு தயாராகின்றன," என்று காஸ்ட்ரோ உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரி ஆட்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

அவர்களின் தீர்க்கதரிசனம் தற்போது மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஐ.நா. அவையின் சம்மதத்தை பெறாமலே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் விமானக் குண்டு வீச்சுகளையும், ஏவுகணை வீச்சுகளையும் ஆரம்பித்து விட்டன. கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்த லிபியாவின் சில பகுதிகளை, கடாபிக்கு விசுவாமான படைகள் மீட்டெடுத்து வந்தன. நாடு முழுவதும், குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த சிரேனிகா பிரதேசம் மீண்டும் கடாபியின் வசம் வந்து விடும் நிலை ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான் நேட்டோவின் இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் சில கடாபிக்கு ஆதரவு தெரிவித்தமை கண்டு நம்மூர் இடதுசாரிகள் கூட பொங்கி எழுந்தார்கள். "தனது நாட்டு சொந்தக் குடிமக்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரியை எப்படி ஆதரிக்கலாம்?" என்று நீதி கேட்க புறப்பட்டார்கள். தற்போது நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் லிபிய அப்பாவி பொது மக்கள் மரணமடைவதை கண்டும் காணாது வாளாவிருக்கின்றனர். கடாபியிடம் இருந்து லிபிய மக்களை காப்பாற்ற புறப்பட்ட நேட்டோப் படைகள், அதே மக்களை கொல்வது சரியாகுமா? ஒரு சர்வாதிகாரியின் இரும்புப் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பொழுது, இத்தகைய மக்கள் இழப்பு தவிர்க்க முடியாது என்று நியாயம் கற்பிப்பார்கள். இதே நியாயத்தை தான் ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போதும் கூறினார்கள். தம்மை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிக்க வந்த அமெரிக்க படைகளை அந்த மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்க வேண்டும். மாறாக அந்நிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக போராடி மாய்ந்தார்கள். லிபியாவும் இன்னொரு ஈராக்காக, இன்னொரு வியட்நாமாக மாறிக் கொண்டிருக்கிறது.

சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வரும் காரணம். "இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்." என்று கூறி "இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்" தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை "வெள்ளை மனிதனின் கடமை" என்று கூறிக் கொள்வார்கள். அதாவது காட்டுமிராண்டிகளான இந்தியர்கள், அரேபியர், ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது ஐரோப்பியரின் கடமை. காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள், இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி அமைத்துக் கொடுக்கின்றன.

பெப்ரவரி 22 , ஆர்ப்பாட்டம் செய்த லிபிய மக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தப் பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வாசிக்கப்பட்டது. "கடாபி தனது சொந்த மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்..." என்று படித்தவர் முதல் பாமரர் வரை பேசத் தொடங்கி விட்டனர். இத்தகைய பொது மக்களின் அபிப்பிராயம் மட்டுமே, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு தேவைப் பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டுமே போதுமானதாக கருதப் பட்டது. வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறப்பதை தடை செய்யும் படி தாம் கேட்டதாகவும், அதனையே ஐ.நா. பாதுகாப்புச் சபை வழி மொழிந்ததாகவும் அரபு லீக் தெரிவித்தது. லிபியா மீதான நேட்டோ தாக்குதல் அவர்களும் எதிர்பார்க்காத ஒன்று என்பதையே இது தெளிவாக்குகின்றது. ஏற்கனவே செர்பியா மீதான நேட்டோ தாக்குதல் ஐ.நா. சம்மதமின்றியே நடந்தது. இதன் மூலம், நேட்டோ விரும்பினால் உலகில் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் என்பது புலனாகின்றது. பெப்ரவரி 22, லிபிய விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக நிரூபிக்கும், செய்மதிப் படங்கள் எதனையும் தான் பார்க்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. நிச்சயமாக ஐ.நா. கூட்டத்திலும் இது விவாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் ஆதாரம் கேட்கப் போகின்றார்களா? ஊடகங்கள் சொல்வதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை அவர்களுக்கென்ன கவலை?

மேற்குலக அரசுகளும், ஊடகங்களும் ஒரு நாளும் பொய் பேசாத உத்தமர்களா? ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்? காலம் பிந்தி வெளிவரும் உண்மை, அதனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கும். அந்நேரம் லிபியா அமெரிக்காவின் காலனியாகி விட்டிருக்கும். லிபியாவின் எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்கி விட்டிருக்கும்.

அயல் நாடுகளான துனிசியாவிலும், எகிப்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற்றதனால், லிபியாவையும் அதன் தொடர்ச்சியாக பார்ப்பது தவறு. அந்த நாடுகளில் வீதிக்கு வந்து போராடிய மக்கள், அரச அடக்குமுறையையும் அஹிம்சா வழியில் எதிர்த்து நின்றனர். இராணுவத்தை பகைப்பதும், திருப்பித் தாக்குவதும் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக கருதினார்கள். சுடுவதற்கு மட்டுமே பயிற்றப்பட்ட படைகளையும்,கனரக ஆயுதங்களையும், கண்டு அஞ்சாது வெறுங்கையுடன் எதிர்த்து நின்றதாலேயே உலக மக்களின் அனுதாபத்தை பெற்றார்கள். லிபியாவிலோ நிலைமை வேறு விதமாக இருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்ட முதல் நாளிலேயே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. ஆர்ப்பாட்டம் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, நவீன ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்தது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. அவ்வாறான கேள்விகள் எதுவும் உங்கள் மனதில் எழுந்து விடக் கூடாது, என்ற அவசரத்தில் ஊடகங்கள் கதை புனைய ஆரம்பித்தன. லிபிய இராணுவம் முழுவதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டது போன்ற அர்த்தம் தொனிக்கும் செய்திகளைக் கூறின. கடாபி ஆப்பிரிக்க கூலிப்படைகளை அனுப்பி ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய கதை பரப்பப் பட்டது. ஆனால் ஓரிரு வாரங்களில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை, கடாபிக்கு விசுவாசமான படைகள் சண்டையிட்டு மீட்டன. அப்போது அந்த இராணுவம் எங்கிருந்து வந்தது?

லிபியாவின் சகாராப் பாலைவனத்தில் வாழும் துவாரக் நாடோடி மக்களும், சாட் நாட்டின் எல்லையோரமாக வாழும் மக்களும் கறுப்பினத்தவர்கள் தாம். அவர்களும் லிபிய பிரஜைகள் தாம். லிபிய இராணுவத்தில் கறுப்பின வீரர்கள் காணப்படுவது ஒன்றும் புதுமையல்ல. கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட, அல்லது கொல்லப் பட்டதாக தெரிவிக்கபடும் ஆபிரிக்க கூலிப்படையினரின் விபரங்கள் இதுவரை ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. அதற்கு மாறாக, லிபியாவில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்த ஆபிரிக்கர்கள் பலர் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். "லிபிய மக்கள் விடுதலை செய்த" பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப் பட்டனர். எகிப்திலும் துனிசியாவிலும் அடைக்கலம் புகுந்த மக்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிறவெறிப் படுகொலைகள் நடந்துள்ளன. ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட ஆப்பிரிக்க அகதிகளை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைகளில் குண்டுகள் வீசப்பட்டன. சிறைக்குள் இருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என்று பிரபல இத்தாலி பத்திரிகை ஒன்று தெரிவித்தது. கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள், இனப்படுகொலையாளர்களாக மாறியது எப்படி? சர்வதேச ஊடகங்கள் ஏன் இந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளை வெளியிடவில்லை?

கடாபி எதிர்ப்பாளர்கள் ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குலக நாடுகளில் அடைக்கலம் கோரியிருந்தனர். அவர்களின் அரசியல் அமைப்பான "லிபிய தேசிய மீட்பு முன்னணி", சி.ஐ.ஏ. இடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டமை ஒன்றும் இரகசியமல்ல. அவர்களது அரசியல் கொள்கை, அல்கைதாவினதைப் போன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டிருந்தது. சோவியத் காலத்தில் ஆப்கான் முஜாகிதினை ஊட்டி வளர்த்த சி.ஐ.ஏ., கடாபி எதிர்ப்பாளர்களின் கொள்கை என்னவென்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெங்காசியின் சில பகுதிகளிலும், தொவ்றுக் நகரிலும் அவர்களது ஆதரவாளர்கள் அதிகம் என்பது கடாபி அரசுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்.
"லிபிய புரட்சி" ஆரம்பித்த நாள் கூட குறிப்பிடத் தக்கது. சில வருடங்களுக்கு முன்னர், "முகமது நபி கேலிச்சித்திரம்" தொடர்பாக முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது பெங்காசி நகரில் உள்ள இத்தாலி தூதுவராலயத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் நினைவு தினத்தன்று தான் இன்றைய கிளர்ச்சி ஆரம்பமானது. துனிசியாவிலும், எகிப்திலும் உணவு விலையேற்றத்தை எதிர்த்து தான் மக்கள் எழுச்சி பெற்றனர். லிபியாவில் அது போன்ற நிலைமை இருக்கவில்லை. ஏற்கனவே லிபிய அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரியை இரத்துச் செய்திருந்தது. மேலும் உணவுப் பொருள் விலையேற்றத்தால் வாழ முடியாமல் கஷ்டப்படும் ஏழைகள் யாரும் லிபியாவில் கிடையாது. அப்படி யாராவது இருந்தால், அவர் ஒரு வெளிநாட்டு கூலித் தொழிலாளியாகவோ, அன்றில் அகதியாகவோ தான் இருப்பார்.

பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக இருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. கடாபியால் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கு விசுவாசமான மக்கள் அந்தப் பிராந்தியத்தில் தான் அதிகம். மேலும் எண்ணெய், எரிவாயு குழாய்கள் வந்து முடியுமிடமும், ஏற்றுமதியாவதும் பெங்காசியில் இருந்து தான். அதனால் பல மேற்கத்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் அங்கே தலைமையகத்தைக் கொண்டுள்ளன. நேட்டோ போர் நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னரே, சில மேற்கத்திய இராணுவ ஆலோசகர்கள் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நோக்குடன் சென்றுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரில் சென்ற நான்கு நெதர்லாந்து போர்வீரர்கள் கடாபிக்கு விசுவாசமான படைகளால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர். லிபியாவில் மாட்டிக் கொண்ட தமது நாட்டு பிரஜைகளை மீட்கச் சென்றதாக நெதர்லாந்து அரசு முதலில் கூறியது. ஆயினும் வெளிநாட்டவர்களை திரிபோலி விமான நிலையம் ஊடாக மீட்டெடுத்து செல்லக் கூடிய வசதி இருந்த காலத்தில், லிபியாவுக்குள் இரகசியமாக நுழைய வேண்டிய தேவை என்ன?

Share this Article

 

Add comment


Security code
Refresh

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2827153